கோலாலம்பூர், மே-29, மின்னியல் பணப்பை அல்லது e-wallet பயன்பாட்டில் உலகளவில் மலேசியர்களே முதலிடம் வகிப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
63 விழுக்காட்டு மலேசியர்கள் பொருட்களை வாங்குவதற்கு அந்த e-wallet வசதியைப் பயன்படுத்துவதாக உலகலாய நிதி தொழில்நுட்பத் தளமான Adyen தெரிவிக்கிறது.
விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் உலகளவில் இதுவே அதிகம் என, 2024 Adyen குறியீடு காட்டுகிறது.
26 சந்தைகளில் 38,000 பொது மக்கள், 13,000 வியாபாரிகள் ஆகியோரிடையே இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பங்கேற்றவர்களில், மலேசியாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள், 500 வியாபாரிகளும் அடங்கும்.
காலங்காலமாக பயன்பாட்டில் இருக்கும் ரொக்கப் பணப்பையைக் காட்டிலும், கைப்பேசிகளில் ஒரு கிளிக் மட்டுமே செய்யத் தேவையான மின்னியல் கட்டண முறைக்கு மலேசியர்கள் மாறி வருகின்றனர்.
அது, விரைவாகவும் எளிதாகவும் இருப்பதால், பெரும்பாலான மலேசியர்களுக்கு பிடித்துப் போயிருப்பதாக Adyen கூறியது.
இவ்வேளையில், இணையம் வாயிலாக பொருட்களை வாங்குவதிலும் மலேசியர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உலக மக்களில் சராசரியாக 44 விழுக்காட்டினர் மட்டுமே சமூக ஊடகங்களில் பொருட்களை வாங்கும் நிலையில், 73 விழுக்காட்டு மலேசியர்கள் இணையத்தில் shopping செய்வதாக அது ஆச்சரியத்துடன் கூறியது.
ஒரு மாதத்திற்குக் குறைந்தது 6 தடவையாவது மலேசியர்கள் இணையத்தில் பொருட்களை வாங்கி விடுகின்றனர்.
அவர்களில் Gen Z எனப்படும் இளையைத் தலைமுறையே அதிகம் என்றும் Adyen கூறியது.