
கோலாலாம்பூர், மே-11-தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சிக்கு, பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியானது சீர்திருத்தம், நீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் இளைஞர் அதிகாரம் ஆகியவற்றுக்கான அவரது தொலைநோக்குப் பார்வைக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று பெரிக்காத்தான் நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாகுபாடற்ற அரசியலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை இந்தத் தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது.
மலேசிய இந்திய இளைஞர்களிடையே ‘தளபதி விஜய்’ எனப் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள அவரது இந்த அரசியல் எழுச்சி, மலேசியாவிலும் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் மலேசிய இந்தியர்களுக்கிடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாச்சாரப் பிணைப்பை இந்த வெற்றி மேலும் வலுப்படுத்தும் எனப் பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சித் தொடங்கிய சினிமா பிரபலம் ஒருவர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
விஜயின் இந்த அதிரடிச் சாதனை இந்தியா மட்டுமின்றி உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது.



