
புத்ராஜெயா, மே-28-2 பதின்ம வயது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், 34 வயது மாற்றான் தந்தைக்கு விதிக்கப்பட்ட 12-ஆண்டு சிறை மற்றும் 14-பிரம்படி தண்டனையை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிச் செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழு, செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை முற்றிலும் நியாயமானது என்றும், அதில் தலையிட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை என்றும் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
2015, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் பத்து கேவ்ஸ், தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள வீட்டில், 16 மற்றும் 17 வயதுடைய அச்சிறுமிகள், தாய் வேலைக்காக வெளியில் சென்ற போது மாற்றான் தந்தையின் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருந்திருக்க வேண்டிய மாற்றான் தந்தையே இந்த கொடூரச் செயலைச் செய்திருப்பது, மிக மோசமான நம்பிக்கை துரோகம் என நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கடுமையாகச் சுட்டிக்காட்டினர்.
மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவ்வாடவர் தனது 12 ஆண்டுகாலச் சிறைத் தண்டனையை உடனடியாகத் தொடர்ந்து அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



