ஈப்போ, ஏப்ரல்-1, ஈப்போவில் உள்ள பேராக் விளையாட்டரங்க ரமலான் சந்தையில் சட்டவிரோத வட்டித் தொழிலையும் இணைய சூதாட்டத்தையும் விளம்பரம் செய்து வந்த மூன்று ஆடவர்களை போலீஸ் தேடி வருகிறது.
அவர்களின் அச்செயல் வீடியோவில் பதிவாகி வைரலாகியிருப்பதால், அம்மூவரையும் அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த 1 நிமிட வீடியோவை அங்குள்ள ரமலான் சந்தை வியாபாரி ஒருவர் பதிவுச் செய்ததாகத் தெரிகிறது.
ஒரு மூன்று நாட்களாக அங்கு ஒவ்வொரு கடையாகச் சென்று Business card-டை அவர்கள் விநியோகம் செய்து, அந்த along தொழிலையும் இணைய சூதாட்டத்தையும் அவர்கள் விளம்பரப்படுத்தி வந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்கிய நபரிடம், விசாரணைக்குத் தேவையான மேற்கொண்டு தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
எனினும் இதுவரை எந்தவொரு தரப்பும் அம்மூவருக்கு எதிராக போலீஸ் புகார் எதுவும் செய்யவில்லை.
ரமலான் சந்தை வியாபாரிகளைக் குறி வைத்து அத்தொழிலை விளம்பரம் செய்து வந்த அம்மூவரிடமும் அது குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்டு விட்ட போதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என, வைரலான வீடியோவில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.