
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-5 – கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கேட்கும் வகையில், ஊராட்சி மன்றங்களின் நாய் பிடிக்கும் SOP நடைமுறைகளை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என, கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசியச் சங்கமான SAFM வலியுறுத்தியுள்ளது.
பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், Rocky-யின் உரிமையாளர் ரோகிணி தேவியுடன் இணைந்து பேசிய போது SAFM அக்கோரிக்கையை முன்வைத்தது.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கயிறு அனுமதிக்கப்பட்ட கருவி அல்ல என்றும், தவறான முறையால் Rocky கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், மேலும், நாயைப் பிடித்த நபர்கள் சீருடை அணியாதது ஏன் என கேள்வி எழுப்பினார் SAFM தலைவர் கலைவாணன்.
இந்தச் சம்பவத்தில் பிடிக்கப்பட்டது, புகாரில் குறிப்பிடப்பட்ட அதே நாய்தானா என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்; இந்த உண்மையை போலீஸும் கால்நடை சேவைத் துறையான DVS மேற்கொள்ளும் விசாரணை மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்றார் அவர்.
இவ்வேளையில், முன்னதாக அப்பகுதியில் நாய் ஒன்று சிறுவனைத் துரத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கும் Rocky-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உரிமையாளர் ரோகிணி தேவி தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில், புதன் கிழமை இரவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட போது, Rocky-யை அடிக்க வேண்டாம் என்றும் விடுவிக்குமாறும் தானும் தனது தாயாரும் கெஞ்சிய போதிலும், அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக அவர் ஏமாற்றத்துடன் சொன்னார்.
குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இருந்த Rocky-யின் மரணத்திற்கு நியாயம் பெற, போலீஸ் மற்றும் கால்நடை சேவைகள் துறையின் விசாரணை முடிவுகளுக்குப் பிறகு அடுத்தகட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கும் வழிவகைகளையும் ரோகிணி தேவி ஆராய்ந்து வருகிறார்.
இந்நிலையில், வெளிப்படையான விசாரணையின் மூலம் Rocky-யின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக SAFM-மும் ரோகிணி தேவியும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இணையவாசிகள் #JusticeForRocky என்ற hashtag-கை உருவாக்கி trending-ஙில் விட்டு நியாயம் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.



