கோலாலம்பூர், ஆகஸ்ட்-20, வங்காளதேச இந்துகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக, பிரிக்ஃபீல்ஸ்ட்ஸ் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நேற்றிரவு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மலேசிய இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற அச்சிறப்பு வழிபாட்டில், முக்கிய அரசியல் தலைவர்களும் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
வங்காளதேச இந்துக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர்களுக்கு இங்கிருந்து உளவியல் ரீதியான ஆதரவை வெளிபடுத்தும் விதமாக அப்பிராத்தனை நடத்தப்பட்டது.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் சஷி, உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர்.
பௌர்ணமி அபிஷேகம், தேவாரம், பஜனைப் பாடல்கள் என பல்வேறு நிகழ்வுகளுடன் தலைவர்களின் பேச்சும் இடம் பெற்றது.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் துணைத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலுவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்நிகழ்வில் 150 இந்துக்கள் பங்கேற்று வங்காளதேச இந்துக்களின் நலனுக்கான பிராத்தனை செய்தனர்.
எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் வங்காளதேச இந்துக்களின் வாழ்வில் அமைதியும் சுபிட்சமும் திரும்பி, அவர்கள் நலமுடன் வாழ பிராத்திப்பதாக மாமன்றம் அறிக்கையில் கூறியது.
இந்துக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்போம் என அச்சிறப்பு வழிபாடு உணர்த்தியுள்ளது.