வயநாடு, ஆகஸ்ட்-4, வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிப்புக்குள்ளாகிய தென்னிந்திய மாநிலம் கேரளாவின் வயநாட்டில் புதுப் பிரச்னை தலைத்தூக்கியுள்ளது.
நிலச்சரிவால் நூற்றுக்கணக்காண மக்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், திருடர்களுக்கு அது ‘கொண்டாட்டமாகி’ விட்டது.
மக்களின் பெரும் துயரத்துக்கு மத்தியில், கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் அவர்கள் வீடு புகுந்து சூறையாடி வருகின்றனர்.
வீடு திரும்பிய மக்களில் சிலர், கதவுகள் உடைக்கப்பட்டு விலையுயர்ந்த பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் களவுப் போயிருப்பதாக புகார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே நிலச்சரிவில் அனைத்தையும் பறிகொடுத்து விட்டோம்; இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் திருடர்கள் எடுத்துக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது என பலர் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அனுமதியின்றி, இரவு நேரங்களில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை; மீட்புப் பணிகளுக்கு உதவுகிறோம் என்று வருவோருக்கும் அது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 215 பேர் மரணமடைந்துள்ளனர்; மேலும் 206 பேரைக் காணவில்லை.