Latestமலேசியா

வாடகை செலுத்த பணமில்லை; காஜாங்கில், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தம்பதி காரில் வசிக்கும் அவலம்

காஜாங், ஜனவரி 19 – சிலாங்கூர், காஜாங்கில், வாடகை செலுத்த தவறியதால், வீட்டிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்ட தம்பதி, கடந்த இரண்டு வாரமாக, தங்களின் புரோட்டோன் பெர்டானா காரிலேயே வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த தம்பதியரின் கார், அவர்களின் உடமைகளால் சூழப்பட்டு, தற்காலிக வீடாக மாறியுள்ளது. அதோடு அக்கார், பழைய பிளாஸ்டிக் பைகளாலும், அட்டை பெட்டிகளாலும் மூடப்பட்டிருப்பது, சுற்று வட்டார மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குப்பைத் தொட்டிக்கு மிக அருகில் வசிக்கும் அவர்களுக்கு இருக்கும் ஒரே துணை, தெருவில் சுற்றுத் திரியும் பூனைகளும், புறாக்களும், கோழிகளும் மட்டுமே. தங்கள் அன்றாட நடவடிக்கைகள் அல்லது தேவைகளை கூட திறந்த வெளியில் தான் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

பழுதடைந்து, இனி பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் அந்த காரில் தான், அவர்கள் அன்றாடம் சமைத்து, கழுவி, உறங்குகின்றனர்.

அக்காரை சுற்றி, எல்லா இடங்களிலும் அவர்களின் உடைமைகள் நிறைந்த பைகள், பெட்டிகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் என தரை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.

அதனால், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், அவ்வழியை பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், அவர்களுக்கு உதவ, அப்பகுதி மக்கள் சிலர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அந்த உதவிகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் செயற்குழு உறுப்பினரான, 63 வயது எஸ். ஜீவானந்தம், அவர்களுக்கு சமூகநலத் துறையின் உதவியை பெற்றுத் தர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, அப்பகுதியில் வசித்து வரும் அந்த தம்பதி, வாடகை செலுத்தாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல எனவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!