கோலாலம்பூர், அக்டோபர்-5,
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
பன்னீர் தற்போது எல்லை கடந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து நடைபெறும் விசாரணையில் முக்கிய சாட்சியாக உள்ளார்; இந்த சமயத்தில் அவரை தூக்கிலிட்டால், விசாரணையை அது பாதிக்கக்கூடும் என ராம் கர்ப்பால் சொன்னார்.
2018 முதல் 2025 வரை தாக்கல் செய்யப்பட்ட புகார்களை அடிப்படையாகக் கொண்டு மலேசிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகக் கடைசியாக செப்டம்பர் 25-ஆம் தேதி 3 மணி நேரம் போலீஸார் பன்னீரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்; அதன் போது, ஜோகூர் மாநிலத்தில் இயங்கியதாக நம்பப்படும் கும்பல் குறித்த முக்கிய தகவல்களை பன்னீர் அளித்ததாகவும் ராம் கர்ப்பால் தெரிவித்தார்.
எனவே, விசாரணை முடிவடைவதற்கு முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி ‘பிழைப்பு’ நடத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு உற்சாகமாக அமையும்; இதனால் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
51.84 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக 2017-ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
அவரது மேல்முறையீடுகளும் பொது மன்னிப்புக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், வரும் புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென பன்னீரின் குடும்பத்தாருக்கு சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.