Latestமலேசியா

வெறும் RM1,000 செலவில் iPhone-ல் விருது வென்ற படம்: இளம் இயக்குநர் ஜஸ்டின் ஃபிரான்ஸ் சாதனை

கோலாலாம்பூர், அக்டோபர்-16 – வெறும் ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான செலவில், படப்பிடிப்புக் குழுவினர் இல்லாமல், ஓர் iPhone-னை மட்டுமே பயன்படுத்தி திரைப்படம் எடுக்க முடியுமா?

முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சட்ட ஆலோசகரும் இளம் திரைப்பட இயக்குநருமான ஜஸ்டின் ஃபிரான்ஸ்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், அச்சம் மற்றும் மனித மனத்தின் போராட்டங்களைப் பேசும் LIFE: Living In Fear Everyday திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் ஒரு பெரிய கதையைச் சொல்லிய ஜஸ்டினின் திரைப்பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எதிர்காலக் கனவுகள் குறித்தும் அந்த குறும்படம் உருவான பின்னணி குறித்தும் அவர் விளக்கினார்.

இந்த அடைவுநிலைக்கான போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல; இது 20 ஆண்டுகள் பயணத்தை உள்ளடக்கியது என்கிறார் ஜஸ்டின்…

ஆனால், இன்று அனைத்துமே எளிதாகி விட்டது; படத்துறை பற்றிய அறிகு கை விரல் நுனியில் கிடைக்கும் அளவுக்கு இணையம் வளர்ந்து விட்டது.

இதனால், தெரியாது என்று சொல்ல முடியாது என ஜஸ்டின் கூறுகிறார்.

இவரும், இவரின் ஒளிப்பதிவாளருமே யாருடனும் துணை இயக்குநராகப் பணியாற்றாமால், நேரடியாக பட இயக்கத்திற்கு வந்திருப்பது சிறப்பம்சமாகும்.

என்றபோதும், வழக்கமாக நாம் காண்பது போலவே, தொடக்கத்தில் இவர் மீது நம்பிக்கை வைக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை; எந்த பின்புலமும் இல்லாமல் படமெடுக்க வந்தாயா என்ற கேள்வியை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது…

பின்னர் ஒருவழியாக இவர்களே இப்படத்தை முன்னின்று எடுத்து பல்வேறு பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கும் அளவுக்கு நிலைமை மாறியது…

என்னதான் விருதுகளை வென்றுக் குவித்தாலும், படைப்பாளிகளுக்குப் பாராட்டு என்பது தான் முதன்மை என்கிறார் ஜஸ்டின்.

இதுபோன்ற அங்கீகாரங்கள் கிடைக்காமல் போயிருந்தால், தாம் ஏதோ தோல்வி அடைந்து விட்டதாக எண்ணி பின்வாங்கியிருந்திருக்கக் கூடும் எனவும் ஜஸ்டின் சொன்னார்.

இவரின் அடுத்த இலக்கு என கேட்டபோது, இனி முழு நீள சினிமா படம் எடுக்க வேண்டுமென பளிச்செனக் கூறினார்.

அதுவும், கலைப் படம் மற்றும் வணிக ரீதியிலான கதையம்சங்களைக் கலவையாகக் கொண்டு படமெடுக்க வேண்டுமென்கிறார்.

“பணம் சம்பாதிப்பதற்காக படமெடுக்க வராதீர்கள்”… இதுவே, தன்னைப் போல இயக்குநராகும் ஆசையில் உள்ளவர்களுக்கு ஜஸ்டின் கூறவிரும்பும் அறிவுரையாகும்…

முயற்சியும் தெளிவான பார்வையும் இருந்தால், பெரிய பட்ஜெட் இல்லாமலும் சினிமாக் கனவை வெல்ல முடியும் என்பதற்கு ஜஸ்டின் ஃபிரான்ஸின் இந்தப் பயணம் ஓர் ஆகச்சிறந்த சான்று.

இவரின் திரைப்படக் கனவுகள் மென்மேலும் சிறக்க வணக்கம் மலேசியா வாழ்த்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!