Latestஉலகம்சிங்கப்பூர்

வெளிநாடுகளில் வாக்களிப்பதை எளிதாக்குவீர் : தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் உத்தரவு

பெர்லின், மார்ச்-13 – வெளிநாடுகளில் இருக்கும் மலேசியர்கள் தேர்தலில் வாக்களிப்பதை எளிதாக்குமாறு தேர்தல் ஆணையம் SPR பணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல் நடைமுறையும் அதற்கேற்ற வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

” நான் சாக்குபோக்கு எதனையும் கேட்க விரும்பவில்லை. மக்கள் வாக்களிப்பதை எளிதாக்குங்கள். வாக்களிப்பு மையங்களை அதிகரியுங்கள். நேரமும் மிச்சமாகும்” என்றார் அவர்.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடு வாழ் மலேசியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியிருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

தேர்தல் முறை சீர்திருத்தங்களில் அரசாங்கம் தனது கடப்பாட்டில் உறுதியாக இருப்பதாகக் கூறிய டத்தோ ஸ்ரீ அன்வார், இனி வரும் காலங்களில் ஏராளமான வெளிநாடு வாழ் மலேசியர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும் என உத்தரவாதம் அளித்தார்.

தானியங்கி வாக்காளர் பதிவு முறைக்கு மலேசியா ஏற்கனவே மாறி விட்டதால், வாக்காளர் பதிவும் இப்போது ஒரு பிரச்னையாக இல்லை என அன்வார் சொன்னார்.

தற்போது அலுவல் பயணமாக ஜெர்மனியில் இருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார், அங்குள்ள மலேசிய மக்களுடனான சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவ்வாறு பதிலளித்தார்.

அஞ்சல் வாக்குச் சீட்டுகளைத் திருப்பி அனுப்பும் கால அவகாசம், குறைவான தேர்தல் பிரச்சார காலம் உள்ளிட்ட விஷயங்கள், அதன் போது பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இது போன்ற குறைகளால், வெளிநாடு வாழ் மலேசியர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக Global Bersih அமைப்பின் பொதுச் செயலாளர் நிர்மலா தேவி விண்கேட்டர், பிரமரிடம் பிரச்னைகளை முன் வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!