
கோலாலம்பூர், செப் 19 – சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் PdPR எனப்படும் வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை தொடர்வதற்கு கல்வி அமைச்சு தளர்வை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி சீருடை அணிவதிலும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளப் பேரிடர் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2025/2026 கல்வி ஆண்டில் இரண்டாவது தவணை விடுமுறைக்குப் பின் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் மற்றும் சீரமைப்பு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கற்றல் பொருட்களை வழங்குதல், உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
சபா மற்றும் சரவாவில் இதுவரை 69 பள்ளிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
சபாவில் 33 தொடக்க நிலைப் பள்ளிகள், ஐந்து இடைநிலைப் பள்ளிகள் மற்றும் சரவாவில் 28 தொடக்க நிலைப் பள்ளிகளும் மூன்று இடைநிலைப் பள்ளிளும் இவற்றில் அடங்கும்.
சபாவில் ஏழு பள்ளிகள் தற்காலிக நிவாரண மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.