போர்டிக்சன், ஜூலை-15, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்களுடன் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்குச் சென்ற மாற்றுத்திறனாளி ஆடவர், ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், பாதி உடல் செயலிழந்த 38 வயது ஆடவர் என போலீஸ் கூறியது.
சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் இருந்து ஜந்து நண்பர்களுடன் கடந்த வியாழன்றே வந்து அவர் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஆறு நண்பர்களும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, நேரமாகி விட்டது, வெளியே வாருங்கள் என ஹோட்டல் நிர்வாகம் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து நீந்திக் கொண்டிருந்தவர் திடீரென பேச்சு மூச்சின்றி கிடந்ததால் நண்பர்கள் பயந்து போயினர்.
பின்னர் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அதிகாலை 4.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சவப்பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து, விசாரணைக்காக அவரின் நண்பர்களான 2 ஆடவர்களும் 3 பெண்களும் கைதாகினர்.
அவர்களில் இருவர் ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் அம்பலமானது.
சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் ஐவருமே போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிச் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.