ஹோலிவூட் Walk of Fame: நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார் சர் டேவிட் பேக்கம்

கலிஃபோர்னியா, ஜூன்-13-உலகக் கால்பந்து நட்சத்திரம் சர் டேவிட் பேக்கம், ஹோலிவூட்டின் புகழ்பெற்ற நடைபாதையான ‘Walk of Fame’ நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த உயரிய அங்கீகாரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதன் மூலம், அவர் வெறும் திடலில் மட்டுமல்ல, ஊடகத்துறையிலும் ஒரு முக்கிய ஆளுமை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், அவரது மனைவி விக்டோரியா, பிள்ளைகள் மற்றும் அவரது நீண்ட கால நண்பரான ஹோலிவூட் நடிகர் டோம் குரூஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்க ஆங்கிலேய கால்பந்து வீரராகத் தொடங்கி, இன்று இந்த நிலையை எட்டியுள்ளது ஒரு கனவு போல் இருப்பதாக பேக்கம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் L.A.Galaxy அணிகளின் முன்னாள் நட்சத்திரமான பேக்கமுக்கு, கடந்தாண்டு வழங்கப்பட்ட Knighthood பட்டத்தைத் தொடர்ந்து கிடைத்துள்ள மற்றுமொரு பிரம்மாண்ட அங்கீகாரம் இதுவாகும்.
விளையாட்டு பொழுதுபோக்கு பிரிவில் இந்த நட்சத்திரத்தைப் பெறும் நான்காவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



