Latestமலேசியா

16-ஆவது பொதுத்தேர்தலோடு இணைந்து நடைபெறலாம்: PN மாநில தேர்தல்கள் குறித்து சனுசி தகவல்

கோலாலாம்பூர், ஜூன்-13-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 16-ஆவது பொதுத் தேர்தலோடு ஏக காலத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக, பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

கெடா, கிளந்தான், திரங்கானு மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் இந்த முறை ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது, தேர்தல் இயந்திரத்தின் பணிகளை எளிதாக்குவதோடு, தேர்தல் செலவினங்களையும் கணிசமாகக் குறைக்கும் என அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் விவாதித்ததாகவும், அதற்குப் பிரதமர் உடன்பட்டதாகவும் கெடா மந்திரி பெசாருமான சனுசி கூறிக் கொண்டார்.

தேர்தல் தேதி குறித்துப் பின்னர் ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது பாஸ் கட்சியின் கீழிருந்த கெடா, கிளந்தான், திரங்கானு சட்டமன்றங்களும், பக்காத்தான் ஹராப்பான் வசமிருந்த சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய சட்டமன்றங்களும் கலைக்கப்படவில்லை.

இதையடுத்து 2023 ஆகஸ்ட் மாதம் அந்த 6 மாநில சட்டமன்றங்களுக்கும் தனியாகத் தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், வரவிருக்கும் தேர்தலில் கெடாவில் உள்ள அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளையும், 15 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பெரிக்காத்தான் நேஷனல் முழுமையாகக் கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் 14-கையும், 36 சட்டமன்றங்களில் 33 தொகுதிகளையும் பெரிக்காத்தான் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!