கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – மித்ரா எனப்படும் இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவின் சிறப்புக் பணிக்குழு, 2025 வரவு செலவு அறிக்கையில் (பட்ஜெட்) 30 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைக் கோருகிறது.
இவ்வாண்டுக்கான பட்ஜெட்டில் அரசாங்கம் ஒதுக்கிய 10 கோடி ரிங்கிட் நிதி, இந்தியச் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு போதுமானதாக இல்லை.
குறிப்பாக இந்திய இளைஞர்களின் சொத்துடைமையை உயர்த்துவதற்கு அது போதுமானதாக இல்லையென, அப்பணிக் குழுவின் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் B40 தரப்பைச் சேர்ந்த 1 லட்சம் பேருக்கு உதவவே, குறைந்தது 5 கோடி ரிங்கிட் தேவைப்படுவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
பெரிய நிதி ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே சமுதாய நலனுக்காக மேலும் அதிகமான திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் செயல்படுத்த முடியும்.
2025 பட்ஜெட்டில் இந்தியச் சமூகப் பொருளியல் மேம்பாடு என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு பிரபாகரன் அதனைத் தெரிவித்தார்.
2025 பட்ஜெட் முன்வரைவுக்கு கருத்துக்களைப் பெறும் நோக்கில் நேற்று பிரதமர் துறையில் நடத்தப்பட்ட அக்கலந்துரையாடலில், நூற்றுக்கும் மேற்பட்ட அரசுச் சாரா இயங்கங்களின் தலைவர்களும் நாடு முழுவதிலுமிருந்து வந்த சமுதாயப் பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.
மேலவை உறுப்பினர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், மித்ரா தலைமை இயக்குநர் பிரபாகரன் ஆகியோரும் இந்த பட்ஜெட் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கருத்து பரிமாற்றம் செய்தனர்.
கலந்துரையாடலில் கிடைக்கப் பெற்ற கருத்துகள் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு நிதியமைச்சின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும் என பி.பிரபாகரன் சொன்னார்.
2025 பட்ஜெட் வரும் அக்டோபர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இவ்வேளையில், புதிய முயற்சியாக இனி மாநில அளவிலும் இயங்க மித்ரா முடிவுச் செய்துள்ளது.
இதுவரை 9 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறிய பிரபாகரன், கூடிய விரைவிலேயே அதற்கான நியமனங்கள் அறிவிக்கப்படுமென்றார்.
மாநில அளவில் இயங்குவதன் வாயிலாக, தோட்டப்புறங்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில மித்ராவின் வாயிலாக ஒதுக்கீடுகள் எளிதில் கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.