101வது வயதை எட்டிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை 10 – மலேசியாவின் நீண்ட கால பிரதமராகப் பதவி வகித்து வந்த துன் டாக்டர் மகாதீர் முகமட், இன்று தனது 101வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கெடா அலோர் ஸ்டாரில் பிறந்த அவர், 1956ஆம் ஆண்டு டாக்டர் சித்தி ஹஸ்மா அலியைத் திருமணம் செய்துகொண்டார். ஹஸ்மா தனது 100வது பிறந்தநாளை இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடவுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இடுப்பு எலும்பு முறிந்ததால் சிகிச்சை பெற்ற மகாதீர், தற்போது சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தாலும், பொதுநிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சுமார் 70 ஆண்டுகளாக அரசியலில் பயணித்துள்ள அவர், 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பிரதமராக இருந்ததுடன், 2018ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவரது ஆட்சிக் காலத்தில் ‘லுக் ஈஸ்ட்’ (Look East) கொள்கை, புரோட்டான் தேசிய கார், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கோலாலம்பூர் கோபுரம் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.



