
பட்டர்வெர்த், ஏப் 22 -இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஒரு விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக , மொத்தம் 11,500 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு லஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சுல்ஹஸ்மி அப்துல்லா (Zulhazmi Abdullah ) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயதான முகமட் பிர்டவ்ஸ் கமால் (Mohd Firdaus Kamal ) , தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டைகளையும் மறுத்தார்.
வடக்கு செபெராங் பெராய் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD) உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் அவர் 55 வயதான நபரிடமிருந்து 5,000 ரிங்கிட் ரொக்கத்தை லஞ்சமாக பெற்றதாக முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் .
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று , பிற்பகல் மணி 3.45 அளவில் வடக்கு செபெராங் பிறை மாவட்டத்தில், ஜாலான் பாகன் லுவார் பட்டர்வெர்த் என்னும் இடத்தில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
மேலும் அதே நபரிடமிருந்து மேலும் 6,500 ரிங்கிட்டை லஞ்சம் கோரியதாகவும் முகமட் பிர்டவ்ஸ் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
2009ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 17(a) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 16(a)(B) ஆகியவற்றின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டன.
இரண்டு குற்றச்சாட்டுக்களையும் முகமட் பிர்டவ்ஸ் மறுத்ததைத் தொடர்ந்து அவருக்கு 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
அவர் மீதான வழக்கு ஜூன் 12 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.



