
கோலாலம்பூர், ஜூலை-23-ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியான KWAP-யின் eFishery முதலீட்டு நட்ட விவகாரத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகத் தேவையில்லை.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் அவ்வாறுக் கூறியுள்ளார்.
எனவே, அன்வார் பதவி விலக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
பாஸின் இந்தத் அரசியல் அழுத்தம் தேவையற்றது என்றும், ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதியே’ என்ற சட்டத் தத்துவத்தை மதிக்க வேண்டும் என்றும், ம.இ.கா மத்தியச் செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் பேசினார்.
e-Fishery-யின் RM163.4 மில்லியன் இழப்பு விவகாரத்தில் அன்வார் பதவி விலக வேண்டுமென, பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் Afnan Hamimi Taib Azamudden முன்னதாக வலியுறுத்தினார்.
அதோடு, KWAP தலைவரும் கருவூலகச் செயலாளருமான தான் ஸ்ரீ Johan Mahmood Merican-னும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
எனினும், கடுமையான தணிக்கை மற்றும் மதிப்பீடுகளையும் மீறி, இந்த இழப்பு ‘திட்டமிடப்பட்ட மோசடியால்’ ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் அண்மையில் மேலவையில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விசாரணை அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து, சட்ட நடவடிக்கைகள் அதன் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், ஓய்வூதிய நிதி விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.



