
கோலாலம்பூர், ஜூலை-23-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது, நாட்டில் நாளொன்றுக்கு 27 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பந்தயங்களைக் கையாண்ட இணைய சூதாட்டக் கும்பலைப் போலீஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
ஜூலை 16-ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் 19 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதில் அக்கும்பல் சிக்கியதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
Ops Soga XI என்ற நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளில், 55 பெண்கள் மற்றும் 6 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 161 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இந்தச் சூதாட்டக் கும்பலை இயக்கிய முக்கிய நிறுவனத்தின் இயக்குநர்கள் ஐவரும் அடங்குவர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகத் தனியாக ஒரு செயலியை உருவாக்கி இந்தச் சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சோதனையின் போது நூற்றுக்கணக்கான கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொழில்நுட்ப சேவைகள் வழங்குவது போல் நடித்து, சட்டவிரோத சூதாட்டத்தை நடத்தி வந்த இந்தக் கட்டமைப்புக் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



