
சுரபாயா, அக்-13-இந்தோனேசியாவில் பச்சை முட்டை ஊட்டப்பட்டதாகக் கூறப்படும் பிறந்து 28 நாட்கள் ஆன பெண் குழந்தையொன்று உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளது. எனினும், குழந்தையின் மரணத்துக்குப் பச்சை முட்டைதான் காரணம் என்பது இதுவரை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Alena எனும் அக்குழந்தை, கடந்த வாரம் முதல் கிழக்கு ஜாவாவின் சுரபாயாவில் உள்ள மருத்துவமனையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.10 மணிக்கு அக்குழந்தை உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த்க அக்குழந்தையின் உடல் வெப்பநிலையைக் குறைக்கும் முயற்சியாக, அதன் பாட்டி பச்சை முட்டையை ஊட்டியதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து அக்குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காது அக்குழந்தை இறந்தது. குழந்தையின் மருத்துவ விவரங்கள் ரகசியமானவை என்பதால், மருத்துவமனை கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
அக்குழந்தையின் உறவினர் ஒருவர் சமூக ஊடகத் தளத்தில் அதன் உடல்நிலை குறித்த தகவல்களைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து அச்சம்பவம் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே, தாய்ப்பால் அல்லது புட்டிப் பாலைத் தவிர வேறு உணவு, பானங்களைப் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகே கஞ்சி போன்ற உணவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.



