
தும்பாட், ஏப் 17 – வாடகைக் கார்களைப் பயன்படுத்தி சட்டவிரோத குடியேறிகளை ஏற்றி வந்த கும்பல் கிளந்தானில் முறியடிக்கப்பட்டது.
அந்த வாடகை காரில் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் ஏற்றப்பட்டிருந்த 10 பெண்கள் உட்பட மியன்மாரைச் சேர்ந்த 37 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை மணி 5.30 அளவில் தும்பாட், Kampung Kok Keli யில் சந்தேகத்திற்குரிய மூன்று கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைத செய்யப்பட்டனர்.
18 முதல் 53 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் தும்பாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மற்றும் பொது நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக தென்கிழக்கு பொது நடவடிக்கை பிரிவின் அதிகாரி மூத்த உதவி கமிஷனர் அகமட் ராட்ஷி (Ahmad Radzi Hussain) தெரிவித்தார்.
அமலாக்க அதிகாரிகளின் இருப்பைக் கவனித்ததும், அந்த மூன்று வாகனங்களும் ஜாலான் சுங்கை பினாங் வழியாக காம்பங் தெர்பாக்கை நோக்கி வேகமாகச் சென்றன.
அனைத்து வாகனங்களும் வெற்றிகரமாகப் தடுத்து நிறுத்தப்பட்டன. எனினும் அந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் தப்பியோடிவிட்டதால் அவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
அந்த வாகனங்களைச் சோதனையிட்டதில், 27 ஆண்கள் மற்றும் 10 பெண்களிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றும், அவர்கள் மியான்மர் நாட்டவர்கள் என்று நம்பப்படுவதாகவும் தெரியவந்ததாக Ahmad Radzi கூறினார்.
ஒரு நபருக்கு 10,000 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் பணம் பெற்றுக்கொண்டு ஒரு கும்பலால் அந்த சட்டவிரோத குடியேறிகளின் நுழைவு மேற்கொள்ளப்பட்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளளது.



