3 மாதங்களாக ஒரு குழந்தையை கொடூரமாக துன்புறுத்தியதை ஆடவர் ஒப்புக் கொண்டார்

சிங்கப்பூர், ஏப்-23-
சிங்கப்பூர், ஏப் 23 – சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சுமார் மூன்று மாதங்களாக, 9 மாத குழந்தையை, அதன் தலையைத் தண்ணீர் வாளியில் அமுக்குவது, முகத்தில் தலையணையை வைத்து அழுத்துவது, மற்றும் வாயில் நுரை வரும் வரை மீண்டும் மீண்டும் கழுத்தை நெரிப்பது போன்ற கொடூரமான வழிகளில் துன்புறுத்தியுள்ளார்.
அந்த நபர் வெற்றுத் தளத்தில் குழந்தையின் கழுத்தை நெரிப்பதைக் கண்ட ஒரு பெண் இது குறித்து போலீசிற்கு தகவல் கொடுத்ததால் அந்தத் துன்புறுத்தல் முடிவுக்கு வந்தது.
குழந்தையை அந்த நபர் துன்புறுத்தும் பல காணொளிகள் அவரது கை தொலைபேசியில் பதிவு செய்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தன.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையான தனது மைத்துனர் மீது இருந்த விரோதத்தின் காரணமாக அக்குழந்தையை துன்புறுத்திய குற்றத்தை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
32 வயதான அந்த நபருக்கு 12 முதல் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்கும் தடை உத்தரவுகள் காரணமாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பெயரையும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



