பாங்கோக், ஆகஸ்ட்-16, வெறும் 37 வயதில் தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு பெத்தோங்டார்ன் ஷினாவத்ரா (Paetongtarn Shinawatra) வரலாறு படைத்துள்ளார்.
ஃபியூ தாய் (Pheu Thai) கட்சியின் தலைவருமான அவரை, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெருவாரியான உறுப்பினர்கள் தாய்லாந்தின் 31-வது பிரதமராக தேர்ந்தெடுத்தனர்.
6 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தாய்லாந்தின் மிக இள வயது பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
Paetongtarn-னின் தந்தை தக்சின் ஷினாவத்ரா (Taksin Shinawatra), அத்தை யிங் லாக் ஷினவத்ரா (Yingluck Shinawatra) இருவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர்கள் ஆவர்.
தக்சின் 2006-ஆம் ஆண்டிலும் யிங்லாக் 2014-ஆம் ஆண்டிலும் இராணுவப் புரட்சியின் மூலம் பதவி வீழ்த்தப்பட்டார்கள்.
இரு நாட்கள் முன்பு வரை பிரதமராக இருந்த ஃகியூ தாய் கட்சியின் ஸ்ரெத்தா தவிசின்( Srettha Thavisin), சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதால் பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரதமர் பதவியேற்று ஓராண்டு கூட முடியாத நிலையில், அவரின் பதவியை தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம் பறித்துக் கொண்டது.