கோலாலம்பூர், ஆகஸ்ட்-19, 3R எனப்படும் இனம்,மதம்,ஆட்சியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் பேரில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் நாளை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த முன்னாள் பிரதமர் மீது இதுவரை 29 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.
கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முஹிடின் பேசியிருந்தது தொடர்பில் அப்புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
பஹாங் சுல்தான் அல் சுல்தான் அப்துல்லா நாட்டின் 16-வது மாமன்னராக இருந்த போது, அவரெடுத்த ஒரு முக்கிய முடிவை விமர்சிக்கும் வகையில் முஹிடின் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதாவது, 15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு போதிய எண்ணிக்கை இருந்தும், அப்போதைய மாமன்னர் தம்மை பிரதமராக நியமிக்காமல் போய் விட்டதாக முஹிடின் சொன்னார்.
முஹிடினின் பேச்சு பஹாங் சுல்தானை சிறுமைப்படுத்தும் வகையிலிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பஹாங் மந்திரி பெசார் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரும் அது குறித்து போலீசில் புகார் செய்திருந்தார்.