கோலாலம்பூர், ஜூலை 3 – 4 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்த இடைநிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பி.ராகுராமின் சமய நிலை மீதான விவகாரத்திற்கு இந்து குடும்பத்தினர் தொடுத்த மேல் முறையீடு வழக்கு தீர்வு காணப்பட்டது. நீதிபதி S. நந்தபாலன் தலைமையிலான மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று ஒப்புதல் உத்தரவை பதிவு செய்தது. ரகுராமனின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது இரண்டு மகள்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. சுரேந்திர ஆனந்த் ( Surendra Ananth) நீதிமன்றத்தில் ஏழு விதிமுறைகள் அடங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை வாசித்தார்.
Mais எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் , ஷா ஆலம் ஷரியா உயர்நீதிமன்றம் மற்றும் சிலாங்கூர் அரசாங்கம் அடங்கிய பிரதிவாதிகள், ஒப்புதல் உத்தரவில் உள்ள நிபந்தனைகளை ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார். ரகுராமின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரது ஓய்வூதியம், Gratuity ( கருணைத் தொகை ) , ஊதியம் மற்றும் பிற நலன்கள் உட்பட ரகுராமின் அனைத்து சொத்துக்களையும் வாரிசாகப் பெற வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளில் அடங்கும்.
இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட ரகுராமின் உடலை தொந்தரவு செய்யக்கூடாது என்பதும், 2020ஆம் ஆண்டு மே 21, ஆம் தேதி ஷா ஆலம் ஷரியா நீதிமன்றம், Mais பதிவு செய்து நிர்வாகம் செய்ய அனுமதித்த உத்தரவை எதிர்மனுதாரர்கள் அமல்படுத்த மாட்டார்கள் என்பதும் மற்ற நிபந்தனைகள். ரகுராமின் சமய மாற்றம் மற்றும் இஸ்லாமிய சடங்குகளின்படி அவரது உடல் அடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இறக்கும்போது ரகுராம் ஒரு முஸ்லீம் என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து ஷரியா நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது. ரகுராமின் மனைவி மற்றும் மகள்கள் இந்துக்களாகவே இருக்கிறார்கள் என்பது ஒப்புதல் ஆணையின் மற்றொரு அம்சமாகும்.