
புத்ராஜெயா, நவ.23-2026ஆம் ஆண்டுக்கான Sijil Pelarajan Malaysia எனும் SPM எழுத்துத் தேர்வுகளை மொத்தம் 420,898 பேர் இன்று தொடங்கினர். எழுத்துத் தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், முதன்முறையாக மலாய் மொழி மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கான செவிமடுத்தல் தேர்வுகள், அந்தந்த எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் அதே நாளில் நடத்தப்படுகின்றன. இதற்கு முன், செவிமடுத்தல் அல்லது வாய்மொழித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் சில மாணவர்கள் எழுத்துத் தேர்வுகளைத் தவறவிட்டதாகவும், சிலர் எழுத்துத் தேர்வுக்கு மட்டும் வந்ததாகவும் கல்வித் தலைமை இயக்குநர் Datuk Dr Mohd Azam Ahmad தெரிவித்தார்.
செவிமடுத்தல் அல்லது வாய்மொழித் தேர்வுகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள், எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்றாலும் தேர்வுக்கு வராதவர்களாகவே கருதப்படுவர் என அவர் விளக்கினார். தற்போதைய தேர்வு முறை மற்றும் கால அட்டவணை தொடர்ந்து பின்பற்றப்படும்; தேவையான மாற்றங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பள்ளிக்கு அடிக்கடி வராத மாணவர்களைக் கண்டறிய, படிவம் ஒன்று முதலே அவர்களின் வருகைப் பதிவை அமைச்சு கண்காணித்து வருவதாக Mohd Azam குறிப்பிட்டார். நிதிப் பிரச்சினைகள், ஊக்கமின்மை மற்றும் குடும்பச் சூழல் போன்ற காரணங்களைக் கண்டறிந்து, தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2025ஆம் ஆண்டு SPM தேர்வுக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை 7,099 ஆகும். 2024ஆம் ஆண்டு அவ்வெண்ணிக்கை 8,108 ஆக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று மலாய் மொழிப் பாடத்திற்கான மூன்று தாள்கள் நடைபெறுகின்றன. காலை 9 மணி முதல் 9.30 மணி வரை தாள் 4 செவிமடுத்தல் தேர்வும், காலை 10.45 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தாள் 1 எழுத்துத் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை தாள் 2 தேர்வும் நடைபெறுகின்றன.



