டாமான்சாரா, ஏப்ரல் 1, டாமான்சாராவில் 5 லட்சம் ரிங்கிட் ரொக்கத்துடன் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸுக்கு சொந்தம் கொண்டாடியவர், ஒரு வழியாக ஒரு வாரம் கழித்து போலீசைச் சந்தித்துள்ளார்.
வெட்டுமர ஆலையின் உரிமையாளர் எனக் கூறப்படும் அந்நபர் சனிக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு டாமான்சாரா போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தார்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் அதனை உறுதிப்படுத்தினார்.
அந்த சூட்கேஸை, டாமான்சாரா பேரங்காடிக்கு மேல் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்து தாம் எடுத்து வந்ததாகவும், மறதியில் அதை காருக்குள் வைக்காமல் பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்திலேயே விட்டுச் சென்று விட்டதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
மறுநாள் காலை வீட்டில் தனது காருக்குள் இருந்து சூட்கேஸை எடுக்க போன போது தான் அது அங்கில்லை என்பதை தாம் உணர்ந்ததாக போலீசிடம் அவ்வாடவர் கூறியுள்ளார்.
ஒரு முதலீட்டுக்காக, கடந்தாண்டு நண்பர் தம்மிடம் கடனாக வாங்கிய பணம் தான் அந்த 5 லட்சம் ரிங்கிட் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
எனினும், அப்பணம் தனது நிறுவனத்துக்குச் சொந்தமானது தான் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அந்நபர் நேற்று சமர்ப்பிக்கவில்லை என டத்தோ ஹுசேய்ன் கூறினார்.
எனவே, அப்பணத்திற்கு அந்நபர் உரிமைக் கொண்டாடுவது மீதான விசாரணைத் தொடரும்.
அடுத்து அவர் மீண்டும் விசாரணைக்கு வரும் போது, அவ்வளவு பெரியத் தொகை எங்கிருந்து வந்தது என்பது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டி வரும் என்றும் டத்தோ ஹுசேய்ன் சொன்னார்.
மார்ச் 20-ஆம் தேதி டாமான்சாரா பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் பாதுகாவலரால் கண்டெடுக்கப்பட்ட அந்த சூட்கேஸுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாடி வந்துள்ளார்.