கோலாலம்பூர், ஜூன்-20, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கக் கோரும் நோட்டீஸ், மக்களவை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்சி கொறடா என்ற வகையில் தானும் அதில் கையெழுத்திட்டிருப்பதாக பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரோனல்ட் கியாண்டி ( Datuk Seri Ronald Kiandee ) தெரிவித்தார்.
ஜெலி, குவா மூசாங், புக்கிட் கன்தாங், குவாலா கங்சார், தஞ்சோங் காராங், லாபுவான் ஆகியவையே அந்த 6 நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகும்.
பெர்சாத்து உறுப்பியத்தை இழக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தொகுதிகள் காலியானதாக கருதப்படும் என அக்கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கட்சி விதிகளே இறுதியானது என சங்கப் பதிவுச் சட்டத்தின் 18C பிரிவு கூறுவதால், பெர்சாத்து எடுத்துள்ள முடிவை சபாநாயகர் மதிக்க வேண்டும்.
எனவே, அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவித்து, இடைத் தேர்தலுக்கு வழி விடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என ரோனல்ட் கியாண்டி கூறினார்.
பெர்சாத்து கட்சியின் நோட்டீசை மதித்து, கிளந்தான் நெங்கிரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக நேற்று அறிவித்த அம்மாநில சட்டமன்ற சபாநாயகரின் செயலையும் கியாண்டி சுட்டிக் காட்டினார்.
கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளித்ததால், 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியின் உறுப்பியத்தை இழந்துள்ளனர்.