Latestமலேசியா

‘எண்ணெய்யால் வழுக்கி விழுந்தேன்’; சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு எதிராக துரைராஜ் RM6.3 மில்லியன் இழப்பீட்டு வழக்கு

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 14 – மலேசிய முன்னாள் விமான பணியாளரான துரைராஜ் சந்திரன், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு, விமானத்தில் ஏறும் போது, எண்ணெய் பசையுள்ள தரையில் கால் வைத்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட முதுகுத்தண்டு பாதிப்புக்காக, 17 லட்சத்து 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அல்லது 63 லட்சம் மலேசிய ரிங்கிட்டை துரைராஜ் இழப்பீட்டாக கோரியுள்ளார்.

35 வயதான துரைராஜ், அலட்சியப் போக்கு காரணமாக, பாதுகாப்பான வேலை சூழலை ஏற்படுத்தித் தர சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

2016-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வந்த துரைராஜ் அந்த விபத்தால் இனி தம்மால் விமான பணியாளராக வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், நேற்று நடைபெற்ற அவ்வழக்கு விசாரணையின் போது, துரைராஜ் சொல்லும் “முழுக் கதையும்” பொய் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் தேதி, சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமான விமானத்தில், காணப்பட்ட எண்ணெய் பசையை சுத்தம் செய்யுமாறு துரைராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், அதனால் பின்நோக்கி வழுக்கி விழுந்ததில், தலை தரையில் இடித்து பலத்த காயத்திற்கு இலக்கானதாக துரைராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமது எதிர்கால வருமான இழப்பு, சம்பாதிக்கும் திறம் இழப்பு மற்றும் எதிர்கால மருத்துவ போக்குவரத்து செலவுகளுக்காக துரைராஜ் அந்த இழப்பீட்டை கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த வழக்கு பத்து நாட்களுக்கு நடைபெறவுள்ள வேளை ; முதல் நாளான நேற்று கழுத்தில் மருத்துவ பட்டையுடன் துரைராஜ் நீதிமன்றத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!