
புது டெல்லி, செப்டம்பர்-14-புது டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்ச நிலை மாநாட்டின் நிறைவு விருந்தில் முழுமையாகச் சைவ உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, இந்திய நாடாளுமன்ற எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளது புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் சீ சின் பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார்.
அதன்போது பரிமாறப்பட்ட இந்திய உணவுகளில் Paneer Lababdar, Guchi Marmilk, கம்பு புலாவ், கேரட் பீன்ஸ் பொரியல் மற்றும் இனிப்பு வகையாக Shahtoot Phirni உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
இந்த விருந்தைத் தொடர்ந்து, Chole Bhature உணவின் புகைப்படத்துடன் X பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, இந்தியாவில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு உண்பவர்கள் என்றும், இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நாட்டின் பலதரப்பட்ட உணவுப் பண்பாட்டை வெளிப்படுத்தாமல் சைவ உணவை மட்டுமே பரிமாறியிருப்பது நியாயமற்றது என்றும் விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள ஆளும் BJP கட்சி, உலகத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலும் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்தது.
இந்திய பாரம்பரியச் சைவ உணவுகளை அனைத்துலகத் தலைவர்கள் மிகவும் விரும்பிச் சுவைத்ததாகவும் அது கூறிக் கொண்டது.



