கோத்தா பாரு, ஏப்ரல் 22 – சிலாங்கூர், செப்பாங், KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், பயணிகள் வந்திறங்கும் பகுதியில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய ஆடவனின் தடுப்புக் காவல், மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
38 வயது ஹபிசுல் ஹவாரியை, நாளை தொடங்கி வரும் சனிக்கிழமை வரையில், மேலும் ஐந்து நாட்களுக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்க, கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் அவன் விசாரிக்கப்படுகிறான்.
இதற்கு முன், ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு அவனை தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
முன்னதாக, இம்மாதம் 14-ஆம் தேதி, பின்னிரவு மணி 1.20 வாக்கில், KLIA விமான நிலையத்தில், மூன்றாவது மாடியிலுள்ள, பயணிகள் வந்திறங்கும் பகுதியில், அவன் இருமுறை சுட்டதாக கூறப்படுகிறது.
இரு மெய்காவலர்களுடன், உம்ரா யாத்ரீகர்களின் வருகைக்காக காத்திருந்த தனது மனைவியை நோக்கி அவன் சுட்ட வேளை : அந்த தோட்டா பட்டு, அப்பெண்ணுடன் இருந்த இரு மெய்காவலர்களில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
அச்சம்பவத்திற்கு பின் தலைமறைவாகி விட்ட அவ்வாடவன், 36 மணி நேரத்திற்கு பின்னர் கோத்தா பாருவில் கைதுச் செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.