கோலாலம்பூர், ஏப் 27 – ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் மகிமா ஏற்பாட்டிலான சைவத் திருமுறை மாநாடு இன்று தொடங்கியது.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை DSK குழுமத்தின் ஒருங்கிணைப்பில் தேவஸ்தானத்தின் தலைவரும் அறங்காவலருமான டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இதனிடையே, இம்மாநாட்டின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்குமான தேவாரப் போட்டியில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் உட்பட பல இடங்களையும் சேர்ந்த போட்டியாளர்கள் திரளாக கலந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக டி.எஸ்.கே குழுமத்தின் தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.
தேவார போட்டியின் முடிவுகள் நாளை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே தேவார போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் சிலர் தங்கள் அனுபவத்தை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துக் கொண்டனர்.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு மீண்டும் தேவார போட்டிகளை நடத்துவதில் தேவஸ்தானம் முன்வந்திருப்பதாகவும் இப்போட்டிக்கு கிடைத்துள்ள ஆதரவை மற்றும் வரவேற்பை பார்க்கும்போது இப்போட்டி தொடர்ந்து வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக நடத்தப்படும் என டத்தோ சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்னிசைக் கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவுகள், சைவ சமயம் சார்ந்த சிறந்த பேருரைகள், தேவாரப் பண்ணிசைகள் ஆகியவையும் இடம்பெற்ற இன்றைய நிகழ்சியில் பலர் கலந்துகொண்டனர். நாளையும் தொடர்ந்து நடைப்பெறவுள்ள நிகழ்ச்சியில் இன்னும் அதிகமானோர் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.