புத்ராஜெயா, மே-5, நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் பயோமேட்ரிக் எனப்படும் கை விரல் ரேகைப் பதிவு முறை இன்னமும் அமுலில் இருந்து வருகிறது.
இங்கு வந்திறங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும், அந்த பாதுகாப்புச் சரிபார்ப்பு நடைமுறைக்கு உட்படுத்தப்படுவதாக குடிநுழைவுத் துறை கூறியது.
எனவே, கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் அல்லது சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளவர்கள் எவராயினும் நிச்சயம் அடையாளம் காணப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவர் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ சொன்னார்.
MDAC எனப்படும் மலேசியா வந்திறங்கும் டிஜிட்டல் அட்டையைப் பூர்த்திச் செய்வதும் கட்டாயமாகும்.
இந்த MDAC பதிவு முறையின் வாயிலாக வருகையாளர்களின் விவரங்கள் பதிவுச் செய்யப்படுகிறது; அமுலாக்க நடவடிக்கைக்குத் தேவைப்பட்டால் அவர்களின் இருப்பை அடையாளம் காண அது உதவும் என்றார் அவர்.
இந்திய-சீன சுற்றுப் பயணிகளுக்கு கடந்தாண்டு டிசம்பரில் வழங்கப்பட 30 நாள் விசா விலக்கை அடுத்து, குடிநுழைவுத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும் ஐந்து முக்கிய அம்சங்களில் இந்த MDAC முறையும் ஒன்றாகும்.
இந்திய-சீன சுற்றுப் பயணிகளுக்கான நுழைவு நிபந்தனை விலக்கு குறித்து அனைத்து குடிநுழைவுத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைத் தொடர்பில், சிலர் சமூக ஊடகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது குறித்து டத்தோ ருஸ்லின் அவ்வாறு விளக்கமளித்தார்.
அவ்வுத்தரவானது, மேற்கண்ட விசா விலக்குக்கு ஏற்ப குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் வேலை செயல்முறைகளை ஒழுங்குப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அவர் சொன்னார்.
எனவே, அவ்வுத்தரவு நாட்டின் நுழைவாயில்களில் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் நெறிமுறை பாதிப்பை ஏற்படுத்தாது என டத்தோ ருஸ்லின் உத்தரவாதம் அளித்தார்.
சுற்றுப் பயணிகள் வந்துப் போவதை குடிநுழைவுத் துறை சுமூகமாக்கிக் கொடுக்கும் அதே வேளை நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துக் கொள்ளாது என்றும் அவர் திட்டட்டமாகக் கூறினார்.