கோலாலம்பூர், மே-29, நாட்டில் 32 லட்சம் ஹெக்டர் இயற்கைக் காடுகள் அழியும் அபாயத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை, அரசாங்கம் நன்கு ஆராயும் என இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் Nik Nazmi Nik Ahmad கூறியுள்ளார்.
நாட்டின் நிலப்பரப்பு 50 விழுக்காடு இயற்கைக் காடுகளால் சூழப்பட்டிருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டை அமைச்சுக் கொண்டிருப்பதால், சுற்றுச் சூழல் கண்காணிப்பு அமைப்பான RimbaWatch வெளியிட்டுள்ள அவ்வெச்சரிக்கையை, தமதமைச்சு கடுமையாகக் கருதுவதாக Nik Nazmi சொன்னார்.
அது குறித்து அமைச்சு விரைவிலேயே அறிக்கை வெளியிடும் என்றார் அவர்.
வெட்டுமரத் தொழில், செம்பனைத் தோட்டங்களின் திறப்பு, நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட காடழிப்பு நடவடிக்கைகளால் 14 முதல் 16 விழுக்காடு வரையில் இயற்கைக் காடுகளை இழக்கும் அபாயத்தில் மலேசியா இருப்பதாக RimbaWatch முன்னதாகக் கவலைத் தெரிவித்திருந்தது.
கடந்த ஈராண்டுகளில் மட்டும் மலேசிய வனப்பகுதி, மொத்த நிலப்பரப்பில் 46.97 விழுக்காட்டுக்கு சரிந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலயும் அது வெளியிட்டிருந்தது.
32 லட்சம் ஹெக்டர் காடழிப்பானது, தீபகற்பத்தில் மிகப் பெரிய மாநிலமான பஹாங்கின் நிலப்பரப்புக்குச் சமமானதாகும் என்றும் அது சுட்டிக் காட்டியது.
2024 மலேசிய மழைக்காடுகளின் நிலை என்ற தலைப்பில் RimbaWatch வெளியிட்டுள்ள அறிக்கை, நாட்டின் வனப்பரப்பு 50 விழுக்காட்டுக்கும் கீழ் குறையாதிருப்பதை அரசாங்கம் உறுதிச் செய்து வர வேண்டும் என வலியுறுத்தியது.