கோலாலம்பூர், ஜூன் 8 – இவ்வாண்டின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலச்சார துணையமைச்சர்
கைருல் பிரடவுஸ் அக்பர் கான் ( Khairul Firdaus Akbar Khan) தெரிவித்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கிடையே 4.3 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இவ்வாண்டு இதே காலக்கட்டத்தில் 5. 8 மில்லியனாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். இவ்வாண்டு நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுபயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என 2024ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் மாபெரும் விற்பனை பெருவிழாவை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது கைருல் கூறினார்.
ரிங்கிட் நாணயத்தின் மதிப்பின் வீழ்ச்சியினால் சுற்றுலா தொழில் துறை அதிகமான சுற்றுப்பயணிகளை கவர முடியும் என்பதோடு அவர்களது செலவிடும் சக்தியும் அதிகரிக்கும் . இவ்வாண்டில் 27.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவரும் இலக்கின் மூலம் நாட்டிற்கு 102.7 பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவிற்கு 2 கோடியே 14 லட்சத்து 1,846 வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வருகை புரிந்தனர். அவர்களில் பெரும்பாலோர் அதாவது 8.3 மில்லியன் சுற்றுப் பயணிகள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாவர் என கைருல் விவரித்தார்.