Latestமலேசியா

கால்பந்தாட்டத்தின் போது மகனுக்கு சிவப்பு அட்டை; இரும்புக் கம்புடன் அடிக்கப் பாய்ந்த தந்தை

குவாலா பிலா, ஜூலை-9, கால்பந்தாட்டத்தின் போது மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் ஆத்திரத்தில் தந்தை இரும்புக் கம்பைத் தூக்கிக் கொண்டு அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் நடைபெற்ற MSSM எனப்படும் மலேசியப் பள்ளிகளின் விளையாட்டு மன்றத்தின் கால்பந்துப் போட்டியின் போதே அச்சம்பவம் நடந்தேறியது.

மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கிய ஆட்ட நடுவரின் முடிவில் அதிருப்தியடைந்த தந்தை,  இரும்புக் கம்புடன் ஆவேசமாக திடலுக்குள் நுழைய முற்பட்ட போது, அங்கிருந்த MSSM அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரேலா தொண்டூழியப் படை உறுப்பினர் ஒருவர் விரைந்து அவ்வாடவரின் கையில் இருந்த இரும்புக் கம்பை பிடுங்கினார்.

பிறகு அவ்வாடவரை ரேலா உறுப்பினர் ஆசுவாசப்படுத்தி, ஒருவழியாக அமைதியடைய வைத்தார்.

ஆவேசம் அடங்கியதும் தந்தையும் மகனும் அங்கிருந்து கிளம்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக வைரலான வீடியோவில், போட்டி அதிகாரிகள் மற்றும் ரேலா உறுப்பினருடன் அவ்வாடவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.

இவ்வேளையில், அச்சம்பவம் நல்லவிதமாகத் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அனைவருக்கும் அதுவொரு பாடமாக இருக்கட்டும் என்றும் நெகிரி செம்பிலான் கல்வி இயக்குநர் டத்தோ Dr ரொஸ்லான் ஹுசின் (Roslan Hussin) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!