கோலாலம்பூர், ஆகஸ்ட் -26 – கோலாலம்பூரில் 103 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி விரைவில் புதுப்பொலிவைப் பெறவுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்களுக்குப் பிறகு அப்பள்ளிக்கு கூடுதல் கட்டடத்தைக் கட்டும் பணிகள் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளன.
பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் அவர்களின் ஒத்துழைப்போடு, பள்ளியின் மேலாளர் வாரியம் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
சண்முகம் மூக்கனின் முயற்சியில் கிடைக்கப் பெற்ற நிதியுதவியைக் கொண்டு, கட்டடத்தை எழுப்பும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வி அமைச்சால் உருமாற்றப் பள்ளி 2025 என அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி, கூடுதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் மேலும் சிறப்பாகச் செயல்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரசாங்கம் ஒருபோதும் தமிழ்ப்பள்ளிகளை கைவிடாது என்பதற்கு இதுவே சான்று என சண்முகம் மூக்கன் சுட்டிக் காட்டினார்.
தமிழ்ப்பள்ளிகள் மீது பிரதமர் காட்டி வரும் அக்கறையை இது புலப்படுத்துகிறது.
எனவே அரசாங்கத்தை சரியான முறையில் அணுகினால் நன்மைகளைப் பெறலாமென்றார் அவர்.
தன்னால் ஆன அனைத்தையும் உறுதியாகக் செச்வேன் என்றும் சண்முகம் உறுதியளித்தார்.