சிங்கப்பூர், செப்டம்பர் -20, சிங்கப்பூர் இளையோரில் மூன்றில் ஒருவர் கடுமையான மனநலப் பிரச்னையை எதிர்நோக்குவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய சமூக ஊடக பயன்பாடு, உடல் எடை குறித்த கவலை, இணையப் பகடிவதை போன்றவை அதற்கு முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.
குறிப்பாக நாளொன்றுக்கு 3 மணி நேரங்களுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் செலவிடும் இளையோருக்கு, மன அழுத்தமும் பதட்டமும் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
சிங்கப்பூர் மனநலக் கழகம் (IMH) நடத்திய ஆய்வில் அது தெரிய வந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற 15 வயதிலிருந்து 35 வயதுக்கு இடைபட்ட சுமார் 2,600 இளையோர்களில், மூன்றில் ஒருவருக்கு மன உளைச்சல், மனச்சோர்வு, பதட்டம் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
அது போன்ற கடுமையான அறிகுறிகள் கொண்டிருந்தோரில் சுமார் 70 விழுக்காட்டினர், அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றதும் தெரிய வந்தது.