ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர் பாரு, ஸ்தூலாங் பாருவில் ஓர் உணவகத்தில் சண்டையில் ஈடுபட்டவர்களை போலீஸ் தீவிரமாக அடையாளம் கண்டு வருகிறது.
அச்சம்பவம் தொடர்பில் யாரும் புகார் கொடுக்கவில்லையென்றாலும், சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ போலீஸ் பார்வைக்கும் வந்துள்ளது.
எனவே, சண்டையிட்டது யார், நேரில் பார்த்த சாட்சிகள், சண்டைக்கான காரணம் குறித்து விசாரிக்கவிருப்பதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் (Raub Selamat) கூறினார்.
வைரலான ஒன்றரை நிமிட வீடியோவில் ஓர் ஆடவரும் பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
சிவப்பு சட்டை அணிந்திருந்த அவ்வாடவர் திடீரென அப்பெண்ணில் முதுகில் குத்தி விட, நாற்காலியால் திருப்பி அடிக்க அப்பெண் முயலுகிறார்.
பிறகு அப்பெண் கடையினுள்ளே ஓடிய வேளை, அவ்வாடவரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த, உணவக உரிமையாளரும் சற்று நேரம் விளக்கை அணைப்பது வீடியோவில் தெரிகிறது.