Latestமலேசியா

பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவிக் கோரி பிரதமரிடம் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் பரிந்துரை

கோலாலம்பூர், பிப்ரவரி-6 – பத்து மலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரதமரின் நேரடி கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளார்.

பொது மக்களின் நன்கொடைகளை நம்பி 1888-ஆம் ஆண்டிலிருந்து பத்து மலையை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் மேம்படுத்தி வருகிறது;

இன்று இந்துக்களின் முக்கியத் திருத்தலமாக இருப்பதோடு மட்டுமல்லாது, மலேசியாவை உலகறியச் செய்யும் சுற்றுலாத் தலமாகவும் பத்து மலை வளர்ந்து நிற்கிறது.

அதை மேலும் மெருகூட்டும் வகையில் பத்து மலையில் பலநோக்கு மண்டபத்தைக் கட்டும் பணிகளில் ஆலய நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

ஒரு பிரமாண்ட மண்டபம், ஒரு சிறிய மண்டபம், கார் நிறுத்துமிடம் மற்றும் இன்னும் பல வசதிகளுடன் அந்த பலநோக்கு மண்டபத்தைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளுக்காக பத்துமலை வளாகத்தில் வசதிகளை மேம்படுத்துவதிலும் நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அதற்கு தேவைப்படும் பெரும் தொகையை ஈடுகட்டும் வகையில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் டத்தோ ஸ்ரீ அன்வாரிடம் பரிந்துரைத்தார்.

இந்த பலநோக்கு மண்டப நிர்மாணிப்பு, பத்து மலையின் அந்தஸ்தை உயர்த்தி, மேலும் ஏராளமான சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும்.

பத்து மலையில் வசதிக் கட்டமைப்புகளைத் தரமுயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து, பிரதமருக்கு தான் ஸ்ரீ விக்கி விளக்கிக் கூறி, நிதி கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிரதமரும் இதனை பரிசீலித்து உதவுவதற்கான என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ நிச்சயம் எடுப்பதாக உறுதி கூறியதாக அறியப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகக் கூட்டத்தின் போது, தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் பிரதமரிடம் அது குறித்து பேசினார்.

பத்து மலை பலநோக்கு மண்டபத்தின் வரைப்படம் மற்றும் அதன் கட்டுமான விவரங்கள் குறித்தும் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அச்சந்திப்பில் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!