
கோலாலம்பூர், ஏப்ரல்-8,
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவி ஆராய்ச்சியாளரான முஹமட் யூசோஃப் ராவுத்தர் மீதான போதைப்பொருள் மற்றும் போலி சுடும் ஆயுத வழக்கு விசாரணை, நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
அரசு தரப்பின் முதல் சாட்சியாக, கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வான் முஹமட் வான் அலி சாட்சியமளித்தார்.
அவர் தனது வாக்குமூலத்தில், 2024 செப்டம்பர் 6-ஆம் தேதி காலையில் Senada Kiara அடுக்குமாடி வீட்டருகே சந்தேகத்திற்குரிய வகையில் ராவுத்தரை கண்டதாகக் கூறினார்.
அவரின் கார் அருகே சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு விட்டு, பரிசோதித்ததில் 2 போலி கைத்துப்பாக்கிகள் அடங்கிய கருப்புப் பையும் 305 கிராம் எடையிலான போதைப்பொருள் பொட்டலமும் கைப்பற்றப்பட்டன.
கருப்புப் பை, முன்னிருக்கைப் பயணி அமருடமிடத்தின் கீழும், போதைப்பொருள் பின்னிருக்கையின் கீழும் கண்டெடுக்கப்பட்டன.
அதற்கு முன்பாக, காலை 5 மணியளவில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது; அதில் தான் ராவுத்தரின் காரில் சுடும் ஆயுதங்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்தே சம்பவ இடத்திற்குச் சென்று கையும் களவுமாக சந்தேக நபரைப் பிடித்ததாக வான் முஹமட் கூறினார்.
இவ்வேளையில், மேல்மட்டத்திலிருந்து வந்த உத்தரவின் பேரிலேயே ராவுத்தர் சிக்க வைக்கப்பட்டதாக, அவரின் வழக்கறிஞர் கூறியதை வான் முஹமட் மறுத்தார்.
அதிகாலை 5 மணிக்கு வந்ததாகக் கூறப்படும் தொலைப்பேசி அழைப்பும் ஜோடிக்கப்பட்டதல்ல என்றார் அவர்.
உளவுபேதா இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இந்த 3 ஆண்டுகளில், கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு புகாரையும் கடுமையாகக் கருதி அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன்; அதே போலத்தான் இந்த சம்பவமும் என வான் முஹமட் கூறினார்.
நீதிபதி டத்தோ முஹமட் ஜாமில் ஹுசேய்ன் முன்னிலையில் விசாரணை இன்று தொடருகிறது.