
புத்ராஜெயா, ஜூன்-9 – அடிப்படைத் தேவைகளுக்கான 0% விற்பனை வரி விகிதம் நிலைநிறுத்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதே சமயம், ஜூலை 1 முதல் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு 5% முதல் 10% வரையிலான விற்பனை வரி விதிக்கப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அது கூறியது.
இவ்வேளையில் வாடகை, குத்தகை, கட்டுமானம், நிதிச் சேவைகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கும் வகையிலும் சேவை வரி விரிவுபடுத்தப்படும்.
இருப்பினும், இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும், மலேசியர்கள் சில சேவைகளுக்கு வரி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கும் இந்த விரிவாக்கம் சில விதி விலக்குகளுடன் வரும் என, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
தொழில்துறையினர் மற்றும் வரி முகவர்களின் சங்கங்கள் உட்பட பங்குதாரர்களுடன் கலந்துரையாடியதில், இந்த SST மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமீர் ஹம்சா கூறினார்.
SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விரிவாக்கம் 2025 ஆம் ஆண்டில் 51.7 பில்லியன் ரிங்கிட் வருவாயை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, கடந்த நவம்பரில் அமீர் ஹம்சா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தற்போதைய SST வசூல் கணிப்பான 46.7 பில்லியன் ரிங்கிட்டை விட 5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருவாயைக் குறிக்கிறது.