
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு மாநில அரசு வழங்கிய நிலங்களை குறித்த காலத்திற்குள் மேம்படுத்தா விட்டால், அவைத் திரும்பப் பெறப்படுமென, ஊராட்சி, சுற்றுலா ஆகியத் துறைகளுக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூய் லிம் பரிந்துரைத்துள்ளார்.
இதுவொரு தவறான யோசனையாகும் என, அந்த மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் சுட்டிக் காட்டினார்.
ஆலயங்களைக் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கினால் மட்டும் போதாது; நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
நிலம் இருந்து நிதி இல்லையென்றால் ஆலயத்தை எழுப்ப முடியாது; ஆக, அவர்கள் நினைப்பது போல் ஆலயம் கட்டுவதொன்றும் எளிதான காரியம் அல்ல என சிவகுமார் குறிப்பிட்டார்.
அதே சமயம், நிலம் கிடைத்த எத்தனை ஆலயங்கள், மண் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தும் கட்டுமானத்தை எழுப்ப விண்ணப்பித்து காத்திருக்கின்றன? அவற்றுக்கு இன்னமும் பதில் வழங்கப்பட்ட பாடில்லை.
சில விண்ணப்பங்கள் அடுத்தக் கட்டத்திற்கே நகரவில்லை எனவும் புகார்கள் வந்துள்ளன.
ஒருவேளை பிரச்னை இருந்தால் அதில் மாநில அரசு தலையிட்டு தீர்க்க வேண்டும்.
கட்டப்பட்ட பல ஆலயங்களிலேயே பிரச்னைகள் நிலவும் போது, கட்டப்படாத ஆலயங்களின் நிலங்களில் கை வைப்பது தேவையற்றது.
எனவே, கட்டப்படாத ஆலயங்களின் நிலங்களை மீண்டும் மாநில அரசே எடுத்துக் கொள்ளும் உத்தேச பரிந்துரையை மஹிமா கண்டிப்பாக எதிர்க்கும் என, அறிக்கை வாயிலாக டத்தோ சிவகுமார் திட்டவட்டமாகக் கூறினார்.
ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆலயங்கள் கட்டப்படவில்லை என்றால், அந்நிலங்களை மாநில அரசு மீண்டும் எடுத்துக் கொண்டு, தேவைப்படும் மற்ற தரப்புகளுக்கு வழங்கப்படுமென, அந்த ஆட்சிக் குழு உறுப்பினர் முன்னதாகக் கூறியிருந்தார்.