
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி எரிகிறது.
தலைநகர் ஜகார்த்தாவில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளன. Bandung, Surabaya, Medan போன்ற முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் போலீஸாருடன் மோதிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
ஆங்காங்கே போராட்டங்கள் வன்முறையாக மாறி, பொது மக்கள் போலீஸை நோக்கி கற்களை எறிவதும் சாலைகளில் டயர்களுக்கு தீ வைப்பதுமாக உள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
தற்போது வரை, இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்து, பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வேலை வாய்ப்பின்மை, குறைந்த சம்பளம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகளையும் முன் வைத்து அழுத்தம் கொடுப்பதால், அதிபர் பிராபோவோ சுபியாந்தோவுக்கு (Prabowo Subianto) இது கடுமையான சவாலாக மாறியுள்ளது.