
கூச்சிங், நவம்பர்-2,
இளையோரின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதால், பிரபலமான இணைய விளையாட்டு செயலிகளான Roblox மற்றும் UMI ஆகியவற்றைத் தடைச் செய்யும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி அதனைத் தெரிவித்தார்.
என்றாலும் இந்த விஷயம் இன்னும் விவாத நிலையிலேயே உள்ளது; டிசம்பரில் Roblox தொடர்பில் புதிய விதிமுறைகளை ஆஸ்திரேலியா செயல்படுத்தியப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் சொன்னார்.
ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை உள்ளூர் நிலைமைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்றதா என்பதை மலேசியா மதிப்பிடும் என்றார் அவர்.
எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையையும், அனைத்துலக கவனத்தைத் தூண்டிய பல சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு Roblox பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை, ஜோகூர் பத்து பஹாட்டில், 9 வயது அண்ணனால் கூர்மையான பொருளால் கழுத்தில் வெட்டப்பட்டதில் 6 வயது தம்பி படுகாயமடைந்தான்.
அச்சம்பவத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருந்தாலும், Roblox விளையாட்டே மூலக் காரணமாக இருந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஜோகூர் போலீஸ் கூறியிருந்தது.
அதாவது, தனது Roblox விளையாட்டுக்கு இடையூறு ஏற்பட்டு, தான் சேகரித்த அனைத்து புள்ளிகளும் காணாமல் போனதால் ஆத்திரமுற்றே, அண்ணன் தன் தம்பியைக் காயப்படுத்தியிருக்கலாம் என விசாரணையில் கண்டறியப்பட்டது.
அது குறித்து கருத்துரைத்த போதே அமைச்சர் நேன்ஸி அவ்வாறு கூறினார்.



