
அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் அபாயம் குறைவு
கோலாலம்பூர், பிப்ரவரி 10 –
அடுத்த பத்து ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறைந்த நிலையில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீடு, கடந்த கால பதிவுகள், நிலநடுக்கச் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் புவியியல் அமைப்பின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
கனிம மற்றும் புவியியல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Datuk Seri Arthur Joseph Kurup கூறினார்.
மலேசியாவில், சபா மாநிலத்தில், நிலநடுக்கச் செயல்பாடுகள் அதிகம் காணப்படும் பகுதியாகவும், அங்கு நடுத்தரம் முதல் அதிக வலிமை கொண்ட நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், தீபகற்ப மலேசியாவில் நிலநடுக்க அபாயம் முழுமையாக இல்லை என கூற முடியாவிட்டாலும், அங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் 6.0 அளவை மீறாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்கும் தொழில்நுட்பம் எதுவும் இல்லை என்றும், சிறிய அளவிலான நில அதிர்வுகள் அவ்வப்போது ஏற்படுவது இயல்பான ஒன்று என்றும் அமைச்சர் விளக்கினார்.
மலேசிய திருநாடு Sunda கோட்டின் மீது அமைந்துள்ளதாலும், Pasifik ‘Ring of Fire’ பகுதியில் இல்லாததாலும், நாட்டிற்கு ஒப்பீட்டளவில் நல்ல புவியியல் நிலைத்தன்மை உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



