
ஜோகூரில் குப்பை மேட்டில் வாழ்ந்த 62 வயது மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட JKM அதிகாரிகள்
ஜோகூர் பாரு, பிப்ரவரி 12 –
ஜோகூர் கெம்பாஸ் பாரு சாலையருகே அமைந்திருக்கும், Taman Setia Tropika பகுதியில் உள்ள புதர்ப்பகுதியில் குப்பை மேட்டைத் தங்கும் இடமாக கொண்டு தற்காலிகமாக வசித்து வந்த 62 வயது மூதாட்டியை சமூக நலத் துறையான JKM அதிகாரிகள் நேற்று மாலை பாதுகாப்பாக மீட்டனர்.
மாவட்ட சமூக நல அலுவலகத்தின் (PKMD) அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த மூதாட்டி மிகவும் துயரமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் தங்கி இருப்பதை கண்டறிந்தனர். அருகிலிருந்த சாலை பரபரப்பாகவும் அதிக சத்தத்துடனும் இருந்ததால், அவருடன் உரையாடுவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதிலும், அவர் தன்னுடைய அடையாளம் மற்றும் குடும்ப விவரங்களை தெளிவாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகளின் உதவியுடன் அவர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
பின்னர் கைரேகை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் 62 வயதுடைய Siti Sumsiya Muksin என அடையாளம் காணப்பட்டார்.
தற்போது அவர் Permai மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



