
பெய்ஜிங், ஜூன்-28-வெயிலில் அலையாமல், சும்மா படுத்துக் கொண்டே இருப்பதற்கு யாராவது சம்பளம் கொடுத்தால் எப்படி இருக்கும்?
சீனாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா, அப்படி ஓர் விசித்திரமான வேலைவாய்ப்பை வழங்கி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Henan மாநிலத்தில் உள்ள Luohe வனவிலங்கு பூங்கா, ‘கரடி வேடமிட்டு’ நடிப்பதற்கென ஆட்களைத் தேர்வுச் செய்துள்ளது.
இதற்கான ஆண்டுச் சம்பளம், சுமார் 15,000 அமெரிக்க டாலர்கள், அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு சுமார் 62,000 வெள்ளி.
மென்மையான கரடி உடையை அணிந்து கொண்டு, பூங்காவை வலம் வருவதும், பார்வையாளர்களைக் கவர்வதும்தான் இவர்களின் வேலை.
ஆனால், இதில் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது.
கரடி உடையில் இருக்கும்போது பொது மக்களிடம் பேசவே கூடாது. வேண்டுமானால் கரடி உறுமுவதைப் போல சத்தம் எழுப்பிக் கொள்ளலாம்.
அவசர காலங்களில் மட்டுமே பேசுவதற்கு அனுமதி உண்டு.
அதேநேரம், மரத்தில் ஏறுவது, நடனமாடுவது, பார்வையாளர்கள் தரும் உணவுகளை வாங்கி உண்பது என எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட பூங்கா நிர்வாகம் அனுமதித்துள்ளது.
கோடை வெயிலில் இந்த உடையை அணிவது கடினம் என இணையவாசிகள் கூறினாலும், இந்த வேலைக்கு 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, வெறும் சில நாட்களிலேயே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டனவாம்…



