
பாலர் பள்ளிகள் குறைவு; ஆபத்தில் தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம்; ஆய்வாளர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-15,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மலேசியா வந்த போது, தமிழையும் திருவள்ளுவரையும் இந்தியா உலகிற்கு பரிசாக அளித்ததாக பெருமையுடன் கூறினார்.
இது பெருமையாக இருந்தாலும், மூத்த அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி ஒரு முக்கியப் பிரச்னையை சுட்டிக் காட்டி நம்மை எச்சரிக்கிறார்.
அதாவது, புதியக் கல்விக் கொள்கை, அடுத்தாண்டு தொடங்கி மாணவர்கள் 6 வயதிலேயே முதல் வகுப்பில் சேர அனுமதிக்கிறது.
இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பாலர் பள்ளி வசதிகள் இல்லையெனில் தமிழ் குழந்தைகள் சமமற்ற தொடக்கத்தில் நிற்க நேரிடும் அபாயம் உள்ளதாக அவர் கவலைத் தெரிவிக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள 527 தமிழ்ப் பள்ளிகளில், 274 பள்ளிகளுக்கு மட்டுமே பாலர் வகுப்பு உள்ளது.
அதாவது, பாதி பள்ளிகளில் அரசாங்க ஆதரவிலான பாலர் பள்ளிகள் இல்லை.
போதாக்குறைக்கு தற்போது 7,800 குழந்தைகள் மட்டுமே தமிழ்ப் பளள்ளிகளில் பாலர் வகுப்புகளில் படிக்கின்றனர்.
முன்பு SEDIC நிதியுதவியால் தனியார் பாலர் பள்ளிகள் இயங்கின. ஆனால் MITRA-க்கு மாற்றப்பட்ட பிறகு அந்த நிதி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் பெரியசாமி வரலாற்றை நினைவூட்டுகிறார்…
1950-களில் Barnes கல்வி அறிக்கைக்கு எதிராக அப்போதைய ம.இ.கா தலைவர் கே. ராமநாதன் போராடி, முதல் வகுப்பிலிருந்தூ மூன்றாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுவே 1952 கல்வி சட்டத்திற்கும், சுதந்திரத்திற்குப் பிறகு ரசாக் அறிக்கைக்கும் அடிப்படையாக அமைந்து, தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளிகள் உருவாக வழி வகுத்தது.
எனவே, தமிழ்க் கல்வி தானாக காக்கப்படவில்லை… போராட்டம், பேச்சுவார்த்தை, மற்றும் நீதி அடிப்படையில்தான் உயிர் பெற்றது.
அதே போல் இப்போது மீண்டும், அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் வகுப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என சமூகம் கோரிக்கையை வலியுறுத்தி அதனை சத்தியமாக்க வேண்டும் என பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.



